இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் ஓட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திங்கட்கிழமை ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.